Saturday 5 July 2014

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - VI


பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.
மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார், "பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்" தொடரும்..

Monday 30 June 2014

மாப்புக் கேட்டல்



அய்யா நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்

அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.

அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!
அய்யா உண்டு

Friday 27 June 2014

உச்சிப்படிப்பு



உச்சிப்படிப்பு

சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா ஆதிகுரு சிவசிவா மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம் அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்

நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம் திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம் செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்

சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்

மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம் குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம் சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம் தரணியது குண்டலம் தரணி புகழ் குண்டலம்

சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா ஏகக் குருவாகப் படைத்து அது நிறைந்தவர் சிவசிவா படைத்து நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர் பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்

அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி சிவசிவா சந்நியாசி செந்தில்வேல் வடிவுமவர் செந்தில்வேல் சந்நியாசி செந்தில் வேலவர் வடிவும் புகழ்படைத்தவர் மாய நிறமானவர் அவர் சிவசிவா

கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர் எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சந்நியாசி

சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய் சிவசிவா த....ம்.....அ.....சி.....அரி நன்றாகக் குருவே துணை சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய் சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய் சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம் சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம் சிவசிவா தந்தேனனம் தந்தேனனம் தந்தேனனம் தந்தேனனம்

மகாலிங்கம்

சிவலிங்கம்

குருலிங்கம்

திருலிங்கம்

ஏகாலிங்கம்

ஏக்காலிங்கம்

அரிலிங்கம்

லிங்காலிங்கம்

சொக்காலிங்கம்

சுகாலிங்கம்

ஆதிலிங்கம்

அருள்லிங்கம்

அடங்காலிங்கம்.


உகப்படிப்பு

அய்யா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா!

சிவசிவா குருவுக்கும், குருபண் டாரத்திக்கும் சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!

சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!

சிவசிவா அய்யா நாராயணர்க்கும் நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும் சிவசிவா கட்டியம்! கட்டியம்! கட்டியம்!

சிவசிவா அய்யா நாராயணசாமி ஜெயம்! ஜெயம்! ஜெயம்!

சிவசிவா அரகரா! ஜெயம்! ஜெயம்! ஜெயம்!

தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர இந்திரநாராயணர் அய்யா நிச்சயித்தபடி அல்லாது மனுசன் நிச்சயித்தப் படியல்ல அய்யாவே!

Thursday 26 June 2014

தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.


தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள். பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வைகுண்ட அய்யா ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை உடையது. "முத்திரிகிணற்றின்" தோற்றம்: பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பற்க்கும் மக்கள் சிலருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட வைகுண்ட அய்யா "முத்திரிகிணற்றை" தன் பதிகளில் ஏற்படுத்தினார். பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா ஏற்படுத்திய கிணறு "முத்திரிகிணறு" ஆகும். வைகுண்ட அய்யாவின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் வைகுண்ட அய்யா ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர். அய்யா வைகுண்டர் "பால்" என்று அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று நினைப்பவர்களுக்கு "நஞ்சாக" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ அரகரா" பாடி அந்த முத்திரிபதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய அமிர்தமாக தித்தித்தது.
வழிபடும் முறை: தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும். "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்: முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!

பூப்பதி



பூப்பதியின் சிறப்பு

பூமடநாத அம்மையை மனம்புரிந்தால் பூப்பதி என பெயர்பெற்றது.

கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருஏடுவாசிப்பு நடைபெறும்.

முட்டப்பதி



அய்யாவின் 5 பதிகளில் ஒன்று முட்டப்பதி. முட்டப்பதியில் பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் வாகன பவனியும் தர்மங்களும் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

முட்டபத்தியில் திருவிழா முடிந்தது சுவாமிதோப்பில் இருந்து முத்துகுடை ஊர்வலம் முட்டப்பதிக்கு வருகிறார்கள்.

முட்டப்பதி கடலுகருள் அய்யா இரண்டு முறை விஞ்ஞை பெற்றார் என்பது முட்டப்பதியின் சிறப்பாகும்.

அம்பலப்பதி



அம்பலப்பதியில் ஐப்பசிமாதம் முதல் வெள்ளிகிழமை கொடியேறி 11நாள் திருவிழா நடைபெறும்.

96 தத்துவங்களை கொடைபதி அம்பலபதி.

திரு ஏடுவாசிப்பு பங்குனிமாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு பட்டாவிஷேகம் நடைபெறும்.

தாமரையூர் பதி



“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்

பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து

ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்

நன்றான மாசி நாளான நாளையிலே

சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்

மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்

வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”

- அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.

7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

சுவாமி தோப்பு தலைமைபதி



சுவாமி தோப்பு தலைமைபதியில் ஆண்டுக்கு மூன்று திருவிழா நடைபெறும்.

ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருநாள் நடைபெறும்.

வைகாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

மாசி 20 அய்யாவின் திரு அவதாரம் நித்தம் நித்தம் திருநாள் காணும் ஒரே பதி சுவாமிதோப்பு தலைமைபதி.

பஞ்சப்பதி



பஞ்சப்பதி என்பது தென்னிந்திய சமயமான அய்யாவழியின் புனித தலங்களாகும். இவை ஐந்து ஆகும்.

சுவாமிதோப்பு பதி

அம்பலப்பதி

முட்டப்பதி

பூப்பதி

தாமரைகுளம் பதி

மேலும் அவதாரப்பதியும் வாகைப்பதியும் இரண்டாம் நிலை புனித தலங்களாக கருதப்படுகிறது.

Wednesday 25 June 2014

அய்யாவின் அற்புதமான ஆறு ஆண்டு தவம்



அய்யா வைகுண்ட பரம்பொருள் 1008ஆம் ஆண்டு மாசி மாதம் 20வது நாள் திருசெந்தூர் பாற்கடலில் உதயமாகி தெச்சணா பூமி என புகழப்படும் நமது தாமரைகுளத்திற்கு வருகிறார்,

அங்கு பண்டாரமாய் வந்த நம் மணவைபதி நாயகரை மண்ணில் கூட மிதிக்க அனுமதிக்கவில்லை, அய்யாவை அங்கு எதித்தவர்கள் பலர். அப்படி இருந்த சூழ்நிலையிலும் யாதவ குலத்தில் தோன்றிய பூவண்ட கோனார் ஆனவர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்கு கொடுத்தார், அய்யாவும் அந்த தென்னந்தோப்பை அன்புடன் ஏற்றுகொண்டார்,

பின்னர் வைகுண்ட பரம்பொருள் அங்கு 6 ஆண்டு தவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார்,

அதில் 2 ஆண்டு தவம் யுகத்தவசு அதாவது இந்த கலியுகதுக்காக,

அடுத்த 2 ஆண்டு தவம் ஜாதிக்காக அதாவது மக்களை ஜாதி அடிபடையில் பிரித்து வைத்திருந்த கொடுமைகளை அழிப்பதற்காக,

அடுத்த 2 ஆண்டு தவம் பெண்கள் சுதந்திரம் மற்றும் அய்யாவின் வழி பித்துருகளுக்காகவும்,

இதனை அய்யா அகிலத்தின் வாயிலாக சொல்கிறார்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும் நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும் இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய் எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே"

பின்னர் அய்யா ஆறு ஆண்டு தவங்களை நிறைவு செய்து அங்கு கூடி இருந்த 18 ஜாதி மக்களுக்கும் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பினார், அந்த நேரத்தில் 18 ஜாதி மக்களுக்கும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி கிடையாது எனவே அன்று பூவண்டன் தோப்பு என்று அழைக்கப்பட்ட நம்முடைய சாமிதோப்பு திருத்தலத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்தினார், அது முத்திரி கிணறு என்று பெயர் பெற்றது, அந்த கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அய்யா அனுமதித்தார், அதுமட்டும் இல்லாமல் இந்த முத்திரி கிணற்றில் பதம் இட்டவர்களுக்கு சஞ்சல நோய்பிணிகள் அனைத்தையும் அய்யா தீர்த்து வைக்கிறார்.

Tuesday 24 June 2014

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - V



தீய சக்திகளை ஒடுக்குதல்

அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும் இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப் பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - IV



தவம்

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தொப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

தொடரும்..

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - II



மாற்றியமைப்பு

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய் கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய் சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"

ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:- வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பிறகு அகிலத்திரட்டில் வேறெங்கும் வெயிலாள் பற்றிய எந்த செய்திகளும் இல்லாதது இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், "வெயிலாளின் உயிர் இவ்விடத்திலேயே எடுக்கப்படுகிறதெனில், வைகுண்டர் அவளிடத்தில் 'தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் உரையாதே' எனக் கூறியது ஏன்?" என்பது எதிர் தரப்பு வாதம்.

தொடரும்....

Monday 23 June 2014

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - III



வைகுண்ட அவதாரம்

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது. முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.

இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.

* அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).

* இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.

* அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது.

இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.

பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.
தொடரும்...

Saturday 21 June 2014

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - I



அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.

அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்.

தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு

கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்ந்த சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது. அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.

முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள். பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

தொடரும்....

Friday 20 June 2014

அய்யா வைகுண்டர்



கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும், முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம் இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான். ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு தோன்றிவிட்டன.

கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.

உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.

அய்யா வைகுண்டரின் வருகையைக் கண்டு தெற்கு முகமாக வணங்கி நின்றார். கந்தபெருமாள், கந்தனுக்கு நல்உபதேசம் செய்த எம்பெருமால் தவம் இருக்க வேண்டிய இடத்தை கலைமுனி ஞானமுனி தேர்வுசெய்ய வாரிக்கரை வழியாக தருவை கரையில் உடலணிந்து இன்று தெச்சணாபதி சாமிதோப்பு என்று போற்றப்படும் (அன்று பூவண்டருக்கு சொந்தமான தோப்பாகும்) அந்த தெய்வீக பூமியிலே தவம் இருக்க அய்யா வருகிறார். வருகின்ற வழியிலே ஆங்காங்கே சில அற்புதங்களை நிகழ்த்திவருகிறார். தெட்சணம் வந்த அய்யா வைகுண்ட பரம்பொருள் ஆறு ஆண்டு தவக்கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். முதல் இரண்டு ஆண்டு யுகத்திற்காகவும் அடுத்த இரண்டாண்டு சாதிக்காகவும், நீசினால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும், இறுதி இரண்டாண்டு பெண்களுக்காகவும் , பெண்ணடிமை விலகவேண்டும் பெண்கள் உயர்வாக வாழவேண்டும் என்பதற்காகவும் ஆறு ஆண்டு கடுந்தவம் புரிந்தார். அதுமட்டுமல்லாது தன்னை நாடிவந்த மக்களுக்கு தீராதநோய் நொம்பல சஞ்சல துன்பங்களை மாற்றி குஷ்டம் கொடிய கன்னபித்து ஆகிய கொடிய நோய்களை மண்நீரால் மாற்றிதரணி எங்கும் காணாத புதுமைகள் செய்தார். அய்யா செய்த அற்புதம் திருவிதாங்கூரை ஆண்ட சுவாதி திருநாள் மன்னன் செவிகளுக்கு எட்டியது அய்யாவை சிறைபிடிக்க காவலாளிகளை ஏவினான். தன்னை சிறைபிடிக்க வருவதை அறிந்த அய்யா வைகுண்டர்திருப்பாற்கடல் நோக்கி வருகிறார். கடல் விலக உள்ளே சென்ற அய்யா வைகுண்டர்ஆதிநாராயணரின் நல்உபதேசம் பெற்று வெளியே வருகிறார். தவக்கோலத்தில் இருக்கும் அய்யாவை கலியரச மன்னனுடைய படைகள் கள்ளனைப்போல் கயிற்றால் கட்டி இழுத்து மன்னனிடம் கொண்டு சேர்த்தார்கள்.

அய்யாவை பார்த்த கலியரச மன்னன் கைவிரல் மோதிரத்தை கைக்குள்ளே மறைத்து வைத்துகொண்டு ஏதடா உன் உற்ற வலுவாலே எந்தன் கைக்குள்ளே இருப்பது என்னவென்று ஓதடா என்று வினாவினான் ஒன்றுமே தெரியாதவன் போல் அய்யா மௌனமாக இருந்தார். இவணை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய கலியநீச மன்னன் அய்யாவுக்கு பாலிலே ஐந்து வகை நஞ்சை கலந்து குடிக்கச்செய்தான். நஞ்சி கலந்த பாலை அய்யா நற்பால் என்று எண்ணிப் பருக நற்பாலாகவே இருந்தது, நெய்யூற்றி கட்டையடுக்கி தீயை அதில் பற்ற வைத்து நீந்திபோ என்று சொன்னான். குளியாத மேனியல்லவா குளித்துவருகிறேன் என்று அய்யா நீந்திவந்தார். வத்தல் புகைபோட்டு அந்த குகைக்குள்ளே புகையோடு புகையாக அய்யாவை வைத்தான். சுண்ணாம்பு சூழையிலே அய்யாவை நீத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினான். நாற்றமிகு டானாவில் அய்யாவை வைத்தான். அத்தனை சோதனையிலும் சாதனை கண்ட அய்யா வைகுண்டரை புலிக்கு இறையாக்க வேண்டும் என்று கனவு கண்டான் பட்டினியோடு அடைக்கப்பட்ட புலி கூண்டிற்குள் அய்யாவை வைத்து வேடிக்கை பார்த்தான் அப்பொழுது ஜீவசெந்துக்கெல்லாம் ஜீவனாக விளங்கும் பவர் இவரல்லவா என்பதை உணர்ந்து கொண்டபுலி அவருடைய பாதத்தை தொட்டு வணங்கியது இதைப்பார்ததுக் கொண்டிருந்த கலியரச மன்னன் கடுங்கோபத்திற்கு ஆனாளன் ஈட்டியால் கடுவாயை குத்துங்கள் என்ற ஆணையிட்டான். கோபமுற்ற கடுவாய் ஈட்டியைக் கவ்வி இழுத்த வெளியே பாய்ச்ச வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த வேதியன் வயிற்றில் பாய்ந்து மாண்டு போனான் . ஆயிரம் பசுவை கொல்வதற்கு சமமானது ஒரு வேதியனைக் கொல்வது தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். பூவண்டரின் பரிந்துரையில் அய்யாவை விடுதலை செய்ய முடிவு செய்தான்.

சான்றோர் மக்களுக்காக மூன்றே முக்கால் மாதம் சிறை இருந்த அய்யாவைகுண்டரை சான்றோர்கள் தொட்டில்கட்டி அய்யாவை சுமந்து தெட்சணம் நோக்கி வந்தார்கள். சான்றோர் குலமக்கள் மனதை தூய்மை படுத்துவதற்கு துவயல் தவசு என்ற தவத்தை வாகைபதியில் மக்களை ஒன்று திரட்டி ஆரம்பித்தார்.முட்டப்பாதையில் தவத்தை நிறைவுசெய்து விடைகொடுத்து அனுப்பினான் ஐம்பதிகளை அய்யா இருந்த தரணிக்கு தந்தார்.

அன்று அயோத அமிர்த கங்கை கரையிலே ஏழு கன்னியரை அக்கனியால் ஆட்கொண்டு ஏழு மதலைகள் கொடுத்து அவர்களை இந்த நிலமைக்கு ஆளாக்கிய நாராயணம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வரை தவம் இருக்க செல்கிறோம். என்று பிள்ளைகளை வளர்க்க நாராயணம் தேவேந்திரன் பசுக்களை வரவழைத்தார் பத்திரகாளி அன்னையிடம் ஏழு மதலைகளையும் ஒப்படைத்தார். ஏழு மதலைகளையும் பத்திரகாளி அன்னை வளர்த்து வந்தாள். வைகை அணை உடைந்து போக சோழமன்னன் இரண்டு மதலைகளை கொன்றுவிட்டான். இரண்டு குழந்தையை பாதுகாக்க தவறிய காளியை நாராயணம் சிறைவைத்தார். சப்தமாதர்களையும் தெய்வமாதர்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி கொள்ள இகனை மணம் புரிந்தார். நாராயணம் பெற்ற பிள்ளைகளை தான் நாம் எல்லாரும் நாராயணம் தான் இவ்வுலகிற்கு வைகுண்டமாக வந்திருக்கிறார். அய்யா இந்த உலகத்திற்கு தந்தபொக்கிசம் தான் அகிலத்திரட்டு அம்மானை. அகிலத்திரட்டு அம்மானை முக்காலத்தையும் உணர்த்துகிறது. அய்யா அருளிய அருள் மொழிகள்தான் அகிலத்தில் நடக்கிறது. கலியழிக்க வந்த தெய்வம்தான் அய்யா வைகுண்டர். அவர் அருளிய அருள் ஞான உபதேசங்களை கேட்டு அதன்வழி நடப்பவர்களுக்கு தர்மயுக வாழ்வு உண்டு இத்தணை சிறப்புகளை நமக்கு தந்த அய்யா வைகுண்டர் 1026ம் ஆண்டு வைகாசிமாதம் 21ம்தேதி பகல் 12.00 மணியளவில் கடிய விமானம் ஏறி வைகுண்ட லோகம் சென்றார்.